தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு அதிநவீன எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்துச் சாதனை படைத்துள்ளனர். வாந்தி, மயக்கம், காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை அறிகுறியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்குச் சோதனைகள் செய்தபோது, பித்தப்பையில் கற்கள் இருப்பதும், அதனால் கணைய வீக்கம் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
பொதுவாக இத்தகைய சிக்கலான நோய்களுக்குச் சென்னையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தூத்துக்குடி மருத்துவர்கள் ‘ஈ.ஆர்.சி.பி’ (ERCP) எனும் நவீன முறை மூலம் சிறுமியின் பித்தப்பையிலிருந்த கல் மற்றும் கசடுகளை அகற்றியுள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பித்தப் பாதையில் அடைப்பை நீக்கி வடிகுழாய் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பின் சிறுமியின் உடல்நிலை சீராகி, மஞ்சள் காமாலையின் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. தென் தமிழக அரசு மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
