என் மகனை எப்படியாவது காப்பாத்துங்க… 11 வயது சிறுவனுக்கு வந்த அரிய நோய்… ரூ 26 கோடி செலவாகும் என்ற… அதிர்ச்சித் தகவலால் கதறும் பெற்றோர்…!

By Swetha on கார்த்திகை 16, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பவன் தேஜ் (11) என்ற சிறுவன், தசைகளைப் பலவீனப்படுத்தும் ‘டுச்சென் தசைச் சிதைவு’ எனும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். பகில்லா ஸ்ரீராமுலு மற்றும் நாகம்மா தம்பதியின் மூத்த மகனான இச்சிறுவனுக்கு 7 வயதில் நடப்பதில் சிரமம் ஏற்படத் தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள பரமிதா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவனுக்கு இந்த அரிய நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நோயின் பாதிப்பு இருந்தபோதிலும், மூன்று மாதங்களுக்கு முன்பு வரை பவன் தேஜ் 5-ம் வகுப்பு படித்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று வந்தான். ஆனால், தற்போது நோயின் தீவிரம் அதிகரித்ததால் நடக்கும் திறனை இழந்து படுக்கையிலேயே முடங்கியுள்ளான். சிறுவனின் மேல்சிகிச்சைக்குச் சுமார் ரூ. 26 கோடி வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

பால் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வரும் தந்தை ஸ்ரீராமுலு, ஏற்கனவே கடன் வாங்கி சுமார் ரூ. 4 லட்சம் வரை மருத்துவத்திற்காகச் செலவழித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட வழியின்றித் தவிக்கும் பெற்றோர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நன்கொடையாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உதவுமாறு உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் பள்ளிக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து படிக்கவும் விளையாடவும் வேண்டும் என்பதே சிறுவன் பவன் தேஜின் மிகப்பெரிய ஆசையாக உள்ளது.