தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வரும் ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்தநாளன்று புதிய கட்சி தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள சூழலில், இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பாஜகவிலிருந்து வெளியேறும் அண்ணாமலை, ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவருடைய ஆதரவாளர்கள் கோவையில் பரவலாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
கோவையில் ஒட்டப்பட்டுள்ள அந்தப் போஸ்டர்களில், அண்ணாமலையின் புதிய கட்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவளிப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்தின் புகழ்பெற்ற பாடலான ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்ற வாசகம் அந்தப் போஸ்டர்களில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆன்மீக அரசியல் மற்றும் மாற்று அரசியலை விரும்பும் ரஜினியின் ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்க்கும் ஒரு உத்தியாகவே இந்த வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், அண்ணாமலையின் இந்த திடீர் அரசியல் நகர்வின் பின்னணியில் பெரும் அரசியல் கணக்குகள் இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அதனைப் பலவீனப்படுத்த பாஜக மேலிடம் போடும் ‘பி டீம்’ திட்டமாக இது இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, நேரடியாகப் பாஜகவாக மோதாமல், அண்ணாமலை மூலம் ஒரு புதிய பிராந்தியக் கட்சியைத் தொடங்கி, தவெகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாக இது இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
