நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோணங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி தாரணி, பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக காளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்தச் சீற்றத்தின் காரணமாக, அங்கு வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது.
அந்தப் பேனர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் செய்த சாதனைகளை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. பலத்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்தப் பேனர் சரிந்து விழுந்தபோது, அங்கிருந்த மாணவி தாரணியின் தலையில் பலமாகத் தாக்கியது. இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக மாணவியை மீட்டு முதலுதவி அளித்ததுடன் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விளம்பர பேனர் விழுந்து பள்ளி மாணவி காயமடைந்த இந்தச் சம்பவம் காளிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து மல்லசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
