மத்திய டெல்லியின் சமாய்பூர் பாட்லி பகுதியில் வசித்து வந்த முன்சுன் கெவட் என்ற காய்கறி வியாபாரி, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை கடனில் மூழ்கியிருந்த அவர், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை தனது மனைவி அனிதா (27) மற்றும் 3, 4, 5 வயதுடைய தனது மூன்று பச்சிளம் பெண் குழந்தைகளையும் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், முன்சுன் கெவட் தனது மனைவியை மட்டும் கொல்ல திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த நேரத்தில் குழந்தைகள் விழித்துக்கொண்டதால் அவர்களையும் சேர்த்து கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்வதற்கு முன்பாக அவர்கள் அனைவருக்கும் மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு அவர் தலைமறைவானார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க டெல்லி போலீசார் தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவரது செல்போன் சிக்னல் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் பகுதியில் மறைந்திருந்த முன்சுன் கெவட்டை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் பிழைப்பிற்காக டெல்லி வந்த இடத்தில், குடும்பத் தலைவனின் தவறான பழக்கத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் சிதைந்து போனது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூதாட்டம் மற்றும் கடன் தொல்லை ஒரு மனிதனை எவ்வளவு பெரிய மிருகமாக மாற்றும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. கைதான முன்சுன் கெவட் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் இந்த கொலைகளின் பின்னணியில் உள்ள மற்ற காரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய குடும்பத்தின் மகிழ்ச்சி, சூதாட்ட போதையால் ரத்தக் கறையாக மாறியிருப்பது சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
