ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தைச் சேர்ந்த சினாசலம் (25) மற்றும் பவானி (19) தம்பதியினர் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், ரயிலில் ஏற்பட்ட தகராறால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தம்பதியினர் செகந்திராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது கணவன் – மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பவானி, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சினாசலம், தனது மனைவியைக் காப்பாற்ற உடனடியாக அவரும் பின் தொடர்ந்து கீழே குதித்துள்ளார்.
இந்தக் கொடூரமான விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிறிய வாக்குவாதம் இரண்டு இளம் உயிர்களைப் பறித்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
