சீனாவில் கால்நடைகள் மத்தியில் அதிவேகமாகப் பரவி வரும் புதிய மர்மத் தொற்று, உலக நாடுகளிடையே மீண்டும் ஒரு கொரோனா காலப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ‘செரோடைப்’ (Serotype) போன்ற அறிகுறிகளுடன் விலங்குகளைத் தாக்கும் இந்த நோய், தற்போது வடமேற்கு சீனாவில் தீவிரமடைந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா தனது எல்லைகளை மூடியுள்ளதுடன், நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட விலங்குகளைப் போர்க்கால அடிப்படையில் அழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்கனவே உலகப் பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், சீனாவிலிருந்து கிளம்பியுள்ள இந்த புதிய அச்சுறுத்தல் சர்வதேசச் சந்தையிலும் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்த மர்ம நோய் மனிதர்களுக்குப் பரவியதற்கான எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் இல்லை என்பது சற்றே நிம்மதியளிக்கும் விஷயமாக உள்ளது. இருப்பினும், கொரோனா பெருந்தொற்று சீனாவில் தொடங்கிய விதம் மற்றும் அது உலகையே முடக்கிய வரலாற்றைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பும் அண்டை நாடுகளும் சீனாவைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தத் தொற்றுக்கான தடுப்பூசிகள் தங்களிடம் கைவசம் இருப்பதாக சீனா கூறினாலும், அதன் பரவல் வேகம் மற்றும் எல்லை மூடல் போன்ற அதிரடி நடவடிக்கைகள், இது கொரோனாவை விடப் பயங்கரமானதாக இருக்குமோ என்ற அச்சத்தை உலக மக்களிடையே விதைத்துள்ளது.
