BREAKING: தமிழ்நாட்டில் புதிய தலைநகரம்….சீமானின் அதிரடி தேர்தல் அறிக்கை… அதிரும் அரசியல் களம்… !

By Muthu Mani on பங்குனி 19, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் 2026-ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எப்போதுமே தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்த முறையும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த கையோடு, தங்களின் அதிரடியான வாக்குறுதிகளையும் முன்வைத்துள்ளது. குறிப்பாக, ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ நடைபெறும் என்று சீமான் அறிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையின் மிக முக்கிய அம்சமாக, தமிழ்நாட்டிற்கு ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு அமைந்துள்ளது. அதன்படி, சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும், திருச்சி நிர்வாகத் தலைநகராகவும், கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மொழி மற்றும் கலைத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் உருவாக்கப்படும் என சீமான் தனது தொலைநோக்குத் திட்டத்தை விவரித்துள்ளார்.

   

அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாகப் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தப் போவதாகக் கூறியுள்ள சீமான், மின்னணு வாக்குப்பதிவு முறையை ஒழித்துவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி வரியில் மாநிலங்களுக்கு 75% பங்கு கிடைக்கப் போராடுவோம் என்றும், அரசு வேலைகளில் பெண்களுக்குச் சமமான (50%) இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்தல் மற்றும் மணற்கொள்ளையை ஒழிக்கத் தனிப்படை போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த வாக்குறுதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

   

கல்வி மற்றும் மொழிக் கொள்கையில் அதிக கவனம் செலுத்தியுள்ள நாம் தமிழர் கட்சி, தூய தமிழில் மருத்துவக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழே இருக்கச் சட்டங்கள் இயற்றப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், கோகோ கோலா உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்பது போன்ற அதிரடி அறிவிப்புகள் அக்கட்சியின் தனித்துவமான நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. இத்தகைய மாறுபட்ட வாக்குறுதிகள் வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.