தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பத்மாநகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசனும், அவரது சகோதரர் சிவாஜி கணேசனும் ஜூஸ் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களுடைய தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு திருக்குறள் கூறினால் ஜூஸ் வழங்கப்படும் என்ற ஐடியாவை யோசித்து அதை செயல்படுத்தியுள்ளனர். ஒரு மாணவர் ஐந்து திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தால் ஒரு சர்பத் இலவசமாக வழங்கப்படும்.
10 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தால் பால் சர்பத் வழங்கப்படும். 20 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தால் மில்க் ஷேக் இலவசமாக வழங்கப்படும். ஜூஸ் கடை உரிமையாளரான சீனிவாசன் இது பற்றி கூறும் போது, மாணவர்கள் பள்ளி முடித்து நேரடியாக வீட்டிற்கு சென்று செல்போன் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்.
5 திருக்குறள், 10 திருக்குறள் மனப்பாடம் செய்து வந்து கூறினால் சர்பத் கிடைக்கும் என்பதால் மாணவர்கள் தினமும் புதுப்புது திருக்குறள்களை படித்து கடையில் வந்து ஒப்பித்து ஜூஸ் குடித்து செல்கின்றனர். அது மனதிருப்தியை தருகிறது. பல மாணவர்களிடையே இந்த செய்தி பரவுகிறது. இதனால் நாளுக்கு நாள் கடைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒரு நாளைக்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சர்பத் வழங்கப்படுகிறது. அதில் பாதிக்கு பாதி மாணவர்கள் தான் வருகின்றனர். திருக்குறள் சொல்லி ஜூஸ் வாங்கி செல்கின்றனர் என கூறியுள்ளார். மாணவர்களிடையே தமிழ் பற்றை ஊக்குவிக்கும் பொருட்டு திருக்குறளை ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூஸ் கொடுத்து புது முயற்சியில் இளைஞர் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.