சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முந்நூறு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்காகப் புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் இன்று காலை வேலைக்கு வந்தவர்கள், இந்தச் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் அங்கு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடர்ந்த மரங்கள் நிறைந்த அப்பகுதியில் புதிதாகப் பாதை அமைக்கப்பட்ட விவரம் நன்கு தெரிந்தவர்களே இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கும் காவல்துறையினர், முதலில் உயிரிழந்தவர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
