விருதுநகர் மாவட்டம் தவசிலிங்காபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தவசியப்பன். கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டே நாட்களில் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, அவர் தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவரை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஆமத்தூர் காவல் நிலையப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தவசியப்பனுக்குத் தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே, மாவட்டத்தின் மற்றொரு பகுதியான ராஜபாளையம் அருகேயும் கூலித் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்ட சூழலில், அடுத்தடுத்து நடந்த இத்தகைய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
