சுவிட்சர்லாந்தின் நென்தாஸ் பகுதியில், பனிமூடிய மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான புல்வெளிகளுக்கு நடுவே நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற அல்போர்ன் இசைத் திருவிழா உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்த அழகிய மலைப்பகுதியில், நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ஒன்றிணைந்து அல்போர்ன் கருவிகளை வாசித்த மயக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சுவிஸ் மலைப்பகுதிகளில் ஒரு சமவெளியில் இருந்து மற்றொரு சமவெளிக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் முக்கிய தொலைத்தொடர்புக் கருவியாக இந்த அல்போர்ன் பயன்படுத்தப்பட்டது. திருவிழாவிற்கு முன்பாகவே இசைப்பாளர்கள் தங்கள் நீண்ட குழல் வடிவ கருவிகளின் ஒத்திசைவைச் சரிபார்த்துத் தயார் செய்தனர். பின்னர் அனைவரும் ஒரே நேரத்தில் இசைத்தபோது, மலைகளிடையே எதிரொலித்த அமைதியான இசை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு தெய்வீக அனுபவத்தை வழங்கியது.
சுவிட்சர்லாந்தின் பழமையான கலாசாரத்தையும் மரபையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், சுவிஸ் இசைக்கலைஞர்கள் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இயற்கை, இசை மற்றும் பழமை மாறா பாரம்பரியம் ஆகியவை ஒன்றாகச் சங்கமிக்கும் இந்த அல்போர்ன் திருவிழா, அந்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் அழகிய நிகழ்வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
