உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம் அரவணைத்த நெகிழ்ச்சியான மற்றும் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. முசாபர்நகரின் சர்தாவல் பகுதியில் வசிக்கும் தெஹ்சீன் என்பவரின் வீட்டிற்குள் திடீரென ஒரு குரங்கு புகுந்தது. அங்கிருந்த தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குல்சும் என்ற மூன்று மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டின் ஒரு பாதுகாப்பான மூலைக்குச் சென்றது. குழந்தையை யாராவது மீட்க முயன்றால் அந்தக் குரங்கு ஆக்ரோஷமடைந்து அவர்களைக் கடிக்க முயன்றது. இதில் 3 முதல் 4 பேர் காயமடைந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தக் குரங்கு குழந்தையைத் தன் பிடியில் வைத்திருந்தது. ஆனால், வியக்கத்தக்க வகையில் குழந்தைக்கு அது எந்தவிதத் தீங்கும் செய்யவில்லை. மாறாக, தனது குட்டியைத் தடவிக் கொடுப்பது போல அந்தக் குழந்தையைத் தடவிக் கொடுத்து, முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டிருந்தது. அநேகமாக அந்தக் குரங்கு தனது குட்டியை சமீபத்தில் இழந்திருக்கலாம் என்றும், அதனால் ஏற்பட்ட மனவேதனையில் இக்குழந்தையைத் தனது குட்டி என்று நினைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த விலங்கு ஆர்வலர் சன்னி மற்றும் அவரது குழுவினர் சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குரங்கின் கவனத்தைத் திசைதிருப்பி குழந்தையைச் சாமர்த்தியமாக மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை எந்தவித காயமுமின்றி நலமாக உள்ளது. விலங்குலகின் தாய்மை உணர்வை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
