தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் வீடுகளுக்கான மின்கட்டணம் வழக்கத்தை விட 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின்மானிகள் குறித்து நடவடிக்கை எடுக்காததுமே இந்த தாறுமாறான கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பயன் மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் எழுவதாகச் சீமான் கூறியுள்ளார். தாமதமான கணக்கீட்டால் மின் பயன்பாடு 500 அலகுகளுக்கு மேல் சென்று, இலவச மின்சாரப் பயன் பறிபோனதுடன் ஓர் அலகுக்கான கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதிக்கு மாறாகத் தவெக அரசு மின்கட்டண அமைப்பில் பல்வேறு தொழில்நுட்ப குளறுபடிகளைச் செய்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதைத் தடுக்க மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறையை உடனடியாகச் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மின்னிலக்க அளவீட்டுக் கருவிகளை விரைந்து பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மின் கணக்கீட்டுக் குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய மின்கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்வதோடு, அளித்த வாக்குறுதிப்படி மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
