“மிசிசிப்பியில் நிகழ்ந்த நம்ப முடியாத அதிசயம்…” நீரில் மூழ்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்… 129 பயணிகளும் மின்னல் வேகத்தில் மீட்பு…. திக் திக் நிமிடங்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 15, 2026

Spread the love

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட சொகுசுப் பயணிகள் கப்பல் மீது டேங்கர் கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியதில், சொகுசுக் கப்பல் பயணிகள் கண்முன்னே ஆற்றில் கவிழ்ந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான 295 அடி நீளமுள்ள ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ என்ற சொகுசுக் கப்பல் துறைமுகத்திற்கு வந்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் பயணிகள் கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ‘அட்லாண்டிக் அஸ்பால்ட்’ நிறுவனத்திற்குச் சொந்தமான டேங்கர் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து சொகுசுக் கப்பல் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்தக் கோர மோதலில் சொகுசுக் கப்பல் ஒருபக்கமாகச் சாய்ந்து மெல்ல மெல்ல ஆற்றில் மூழ்கத் தொடங்கியது.

   

விபத்து நடந்த நேரத்தில் அந்தக் கப்பலில் 129 பயணிகள் இருந்த நிலையில், கப்பல் முழுமையாகக் கவிழ்வதற்கு முன்பாகவே நியூ ஆர்லியன்ஸ் தீயணைப்புத் துறை, அவசர மருத்துவப் பிரிவு, காவல்துறை மற்றும் கடலோரக் காவல்படையினர் மின்னல் வேகத்தில் களமிறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கப்பல் நீரில் மூழ்கிய பிறகும் தீவிரமாகத் தொடர்ந்த மீட்புப் பணியின் மூலம் கப்பலில் இருந்த 129 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

   

இந்த விபத்தில் காயமடைந்த 29 பேர் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், யாருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் அனைவரும் மீட்கப்பட்ட இந்தச் சம்பவத்தை “மிசிசிப்பியில் நிகழ்ந்த அதிசயம்” என்று நியூ ஆர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள நிலையில், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.