திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 8 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வ கர்மா என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த போது குற்றவாளியைப் பிடிக்க போலீசார் 13 நாட்கள் தீவிரமாகப் போராடி, ஆந்திராவின் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் தற்போது நீதி கிடைத்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவாளி தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் 2 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
