விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்த அக்பர் அலி, மனைவியின் முதல் கணவர் பெயரில் இருந்த காப்பீட்டுப் பணத்தைக் கேட்டுத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பான மோதலில் சிறை சென்று ஜாமீனில் திரும்பிய அக்பர் அலி, பழிவாங்கும் நோக்கில் இந்த விபரீதச் செயலில் ஈடுபட்டுள்ளார். அதிகாலை நேரத்தில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, அக்பர் அலி அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தார். இதில் அக்பர் அலி மீதும் தீப்பற்றியது.
இந்தத் தீ விபத்தில் சிக்கந்தர் பீவி, செய்யது அலி பாத்திமா, சிறுவன் பாரூக் மற்றும் அக்பர் அலி ஆகிய நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த பர்வீன் என்ற சிறுமி தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துயரச் சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
