மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயதான ரமாபாய் ரன்பீர் என்ற தாய், தனது மகள்களின் படிப்புச் செலவிற்காக எவ்வித முன்னனுபவமும் பயிற்சியும் இன்றி வெறுங்காலுடன் மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கணவரை இழந்த ரமாபாய், உணவகங்களில் சமையல் வேலை செய்து வரும் வருமானத்தைக் கொண்டு தனது இரண்டு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார். இந்திய பிரசாரக் சன்ஸ்தா சார்பில் நடத்தப்பட்ட ‘அமிர்த ஓட்டப் பந்தயத்தில்’ காலணிகள் கூட இல்லாமல் பங்கேற்ற அவர், ரூ.3,000 பரிசுத் தொகையைக் தட்டிச் சென்றுள்ளார்.
“நாள்தோறும் என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறேன்… இன்று எனக்காக ஓடினேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதே போட்டியில் மற்றொரு பிரிவில் பங்கேற்ற அவரது மகளும் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். வறுமையிலும் தன் மகள்களின் கல்விக்கனவு சிதைந்துவிடக் கூடாது என்பதற்காகப் போராடும் இந்தத் தாயின் மன உறுதியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
