உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் அருகே உள்ள பேதல்காட் பகுதியில் உள்ள தல்லி சேத்தி கிராமத்தில், ஜெயந்தி தேவி என்ற பெண்ணின் வீட்டிற்குள் திடீரென ஒரு சிறுத்தை நுழைந்தது. பொதுவாக இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் மக்கள் பீதியடைந்து அலறிக்கொண்டு ஓடுவது வழக்கம். ஆனால், துளியும் அச்சமின்றி செயல்பட்ட ஜெயந்தி தேவி, சிறுத்தை வீட்டிற்குள் இருக்கும்போதே மிகுந்த எச்சரிக்கையுடன் உடனே கதவை அடைத்து அதை உள்ளேயே பூட்டினார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், வீட்டுக்குள் முடங்கியிருந்த அந்தச் சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களின் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்தச் சிறுத்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.
https://twitter.com/KumaonJagran/status/2109656028098736621/video/1
உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்து நேரத்திலும் ஜெயந்தி தேவி காட்டிய இந்தத் துணிச்சல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சிறுத்தையின் தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தற்செயலாக அமைந்த அதிர்ஷ்டமா அல்லது அவரது அசாதாரண மன உறுதியா என்ற விவாதம் எழுந்தாலும், இந்தச் சம்பவம் அவரது அபாரமான வீரத்தையே உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
