குஜராத் மாநிலம் ஜுனாப்காத் பகுதியில் உள்ள பிரேரண்தாம் ஆசிரமத்திற்கு வெளியே மக்கள் அமர்ந்திருந்தபோது, திடீரென அங்கு வந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை அடித்துத் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிநார் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த ஆசிரமத்தின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த நாயை, சிறுத்தை மிகத் துணிச்சலாகவும் மின்னல் வேகத்திலும் கவ்விச் செல்லும் இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவம் நடைபெற்றபோது, அங்கிருந்து சில அடி தூரத்தில் மூன்று பேர் ஒரு பெஞ்சில் அமர்ந்து தங்களது மொபைல் போன்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் அருகில் சிலரும் பேசிக்கொண்டிருந்த போதிலும், சிறுத்தை வந்துசென்ற வேகம் காரணமாக அருகில் இருந்த யாருக்கும் என்ன நடக்கிறது என்பதே உடனடியாகத் தெரியவில்லை. பின்னர் ஆசிரமத்தினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த பின்னர்தான் இந்தத் தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்தது.
பொதுவாக இரவு நேரங்களிலோ அல்லது விடியற்காலையிலோ நடமாடும் வனவிலங்குகள், தற்போது மக்கள் நடமாட்டம் உள்ள மாலை நேரத்திலேயே ஆசிரமப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு மற்றும் ஆன்மீகப் பகுதிகளுக்கு அருகில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் இது பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
