தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் விட்டதை பிடிக்க ஈபிஎஸ் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் பலரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் எழுப்பி வருவதால் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
அதே சமயம் இ.பி.எஸ் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று அமமுகவில் ஐக்கியமான நிர்வாகிகள் பலர் அண்மைக்காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் அமமுக அரியம்பாளையம் பேரூராட்சி செயலாளர் துரைசாமி மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்பி உள்ளார். அவருடன் அமமுக ஒன்றிய செயலாளர் கே சி சண்முகம், வார்டு செயலாளர் கோபால் அசோகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
