கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த கும்ளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கும், அவரது மனைவி வித்யாவுக்கும் இடையே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வித்யாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புனித் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை நாராயணசாமி பலமுறை கண்டித்தும் வித்யா தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாததால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே வித்யா தனது பெயரிலிருந்த 8 சென்ட் நிலத்தில் 1,500 சதுர அடி நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்துடன் தனது காதலன் புனித்துடன் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதிக்குச் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள வங்கிக்கு வித்யா பணம் எடுக்க வந்திருப்பதை அறிந்த நாராயணசாமி, அங்கு விரைந்து சென்று நிலத்தை விற்ற பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்களின் பெயரில் எழுதி வைக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வித்யாவை வங்கிக்கு வெளியே அழைத்து வந்தபோது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நாராயணசாமி, கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை சரமாரியாகத் தாக்கியதில் வித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தளி போலீசார் வித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய நாராயணசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
