கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.ஏ.எல். காவல் எல்லைக்குட்பட்ட விபூதிபுரா பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா (38). ஆட்டோ டிரைவரான இவரும், வீட்டு வேலை செய்து வந்த சுருதி (34) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மனைவி சுருதி எந்நேரமும் செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவிலும் சுருதி ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, வீட்டிலிருந்த பீர் பாட்டிலால் சுருதியின் தலையில் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுருதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மனைவி இறந்த அதிர்ச்சியிலும் தவறை உணர்ந்த அச்சத்திலும், ராகவேந்திராவும் வீட்டிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த எச்.ஏ.எல். போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
