மைசூர் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அன்சூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹரிஷ் என்பவர், ரியல் எஸ்டேட் மற்றும் பழைய வாகன விற்பனை தொழில் செய்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட திடீர் சறுக்கல் காரணமாகக் கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கிய இவர், உறவினர்கள் இல்லாத நேரத்தில் மனைவி நிஷ்சிதா மற்றும் 13, 6 வயதுடைய இரு மகள்களின் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டி மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீண்ட நேரமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்காததால் வீட்டிற்கு வந்த உறவினர்கள், குடும்பமே சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய சோதனையில், ஹரிஷ் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் தனது சொத்து விவரங்கள், கடன் தொல்லைகள் மற்றும் நண்பர்களிடம் உள்ள பாக்கிகள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். வங்கியால் சொத்துகள் முடக்கப்பட்டதால் ஏற்பட்ட கடன் நெருக்கடியே இந்த விபரீத முடிவுக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் மைசூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
