“குடும்ப மானம் முக்கியம்”… போதையில் வந்த மகன்… பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த நெஞ்சை பதறவைக்கும் உண்மை… தற்கொலை நாடகத்தை உடைத்த மருமகள்…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம், கோண்டல் தாலுகாவில் உள்ள குண்டலா கிராமத்தில் கடந்த ஜூன் 30 அன்று அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 23 வயதான ராம் பாபுபாய் பாம்பாவா என்ற இளைஞர் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்டமாக குடும்பத்தினரால் கூறப்பட்டது. ஆனால், அது தற்கொலை அல்ல, அவரது பெற்றோரே திட்டமிட்டு நடத்திய படுகொலை என்பது பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் போலீஸ் விசாரணையின் மூலம் தற்போது அம்பலமாகியுள்ளது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, உயிரிழந்த இளைஞரான ராமிற்குத் தீவிர மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கும், அவரது பெற்றோரான பாபுபாய் மற்றும் மனிஷாபென் ஆகியோருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. சம்பவத்தன்றும் ராம் கடும் மதுபோதையில் வந்து சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த தாய், அவரது தொண்டையில் வலுக்கட்டாயமாக ஆசிடை ஊற்றியுள்ளார். அதே நேரத்தில், அவரது தந்தை ராமின் வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், குடும்பத்தின் நற்பெயர் கெட்டுவிடும் என்று அஞ்சி, இந்த கொலையைத் தற்கொலை போல நாடகமாடி மறைக்க அவர்கள் முயன்றுள்ளனர்.

   

ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ராமிற்கு, பன்ஷிபென் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. கணவரின் மரணத்தின் போது பெற்றோர் வீட்டில் இருந்த பன்ஷிபெனிடம், உண்மையைச் சொன்னால் குடும்பப் பெயர் கெட்டுவிடும் என மாமனார்-மாமியார் மிரட்டியுள்ளனர். எனினும், கணவனின் கழுத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான காயங்களைக் கண்டு பன்ஷிபென் காவல்துறையில் புகார் அளித்தார். பிரேதப் பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிந்ததைத் தொடர்ந்து, காவல் அதிகாரி யு.ஆர். டாமோர் தலைமையிலான போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆசிட் பாட்டில், வாந்தி படிந்த படுக்கை விரிப்பு ஆகியவற்றை மீட்ட போலிஸார், குற்றவாளிகளான பெற்றோரை ஜூலை 2 அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.