கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்ற எலக்ட்ரீசியனும், அவரது மனைவி ஹசீனா பீவியும் (36) தங்களது 4 குழந்தைகளுடன் கடந்த 4 மாதங்களாக நாலாஞ்சிராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஹசீனா பீவியின் நடத்தை மீது சுரேஷ்குமாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வாரம் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹசீனா பீவி மண்ணந்தலை காவல் நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசில் புகார் செய்ததால் ஹசீனா பீவி மீது சுரேஷ்குமாருக்கு கோபம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த குழந்தைகளும் கண் விழித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சுரேஷ்குமார், திடீரென கத்தியை எடுத்து ஹசீனா பீவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
கணவரின் இந்தத் திடீர் கொடூர தாக்குதலால் ஹசீனா பீவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்களது கண் எதிரே தாய் படுகொலை செய்யப்பட்ட பயங்கரக் காட்சியைக் கண்ட 4 குழந்தைகளும் கதறி அழுதனர். இக்கொலை சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த மண்ணந்தலை போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய சுரேஷ்குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
