உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த ஷியாம் பீகாரி என்பவர், கோவிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பிரசாதம் கொடுப்பதற்காகத் தனி அறைக்கு அழைத்துச் செல்லும் அவர், அங்கு சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதுடன், அந்தச் சம்பவங்களையும் ரகசியமாக வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியளிக்கும் வகையில், சிறுமிகளிடம் பதிவு செய்த ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளில் உள்ள நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச காவல்துறையின் கவனத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கோவிலிலேயே வைத்து ஷியாம் பீகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அண்மையில் வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், ஷியாம் பீகாரி குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனையும், ரூ.1.43 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
