வங்கதேசத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடுவதற்காக வளர்க்கப்பட்ட 700 கிலோ எடையுள்ள எருமை மாடு ஒன்று, அச்சு அசல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளதால் இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. இந்த எருமை மாட்டின் நெற்றியில் வெள்ளை நிறத் திட்டும், தலையின் மேல் பகுதியில் டொனால்ட் டிரம்பின் சிகை அலங்காரத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையிலான மஞ்சள் கலந்த வெள்ளை நிற முடியும் காணப்படுகிறது. இதனால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் இதற்கு ‘டொனால்ட் டிரம்ப் எருமை’ என்று பெயரிட்டுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பொதுமக்கள் மத்தியில் இந்த எருமை மாட்டிற்கு கிடைத்த பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்ட வங்கதேச அரசு அதிகாரிகள், இதனைப் பலியிடக் கூடாது என்று அதிரடி முடிவு எடுத்தனர். உடனடியாக அதன் உரிமையாளரான ஜியா உத்தீன் மிருதா என்பவரிடமிருந்து அந்த எருமை மாட்டை அரசு விலைக்கு வாங்கி, டாக்காவில் உள்ள வங்காளதேச தேசிய மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் பார்வைக்காகப் பாதுகாப்பாக ஒப்படைத்தது. இதே பண்ணையில் வளர்க்கப்பட்ட, மக்களின் கவனத்தை ஈர்த்த மற்றொரு 750 கிலோ எடையுள்ள எருமை மாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் ‘பெஞ்சமின் நேதன்யாகு’ என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
