மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘நியூ இந்தியா அசூரன்ஸ்’, நாடு முழுவதும் 550 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓராண்டு காலம் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு, தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பித்து இந்த மத்திய அரசு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைச் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்; மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். 06.07.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; தேர்வாகும் நபர்களுக்குப் பயிற்சி காலத்தில் மாதம் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.newindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ‘Careers’ பகுதிக்குச் சென்று ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 23, 2026 அன்று தொடங்கி, ஜூலை 6, 2026 வரை நடைபெறும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்துப் பார்ப்பது சிறந்தது.
