“வாழ்க்கை முடிந்தாலும்… அன்பு முடிவதில்லை…” பாட்டி எஸ்.ஜானகியின் நினைவுகளில்… பேத்தியின் உருக்கமான பதிவு…!

By Swetha on ஆடி 16, 2026

Spread the love

தன் காந்தக் குரலால் உலகையே கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மறைவைத் தொடர்ந்து, அவரது இறுதி நாட்கள் மற்றும் அவர் சந்தித்த துயரங்கள் குறித்து பேத்தி அப்சரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, ரசிகர்களால் “ஜானகி அம்மா” என்று அன்போடு அழைக்கப்பட்டவர். அவர் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அடுத்தடுத்த பேரிழப்புகளால் மனமுடைந்து, இறுதி நாட்களில் மைசூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.

ஜானகி அம்மாவின் வாழ்க்கையை உலுக்கிய முதல் பேரிழப்பு, அவருக்கு மிகவும் பிடித்தமான மூத்த பேத்தி வர்ஷாவின் மறைவு ஆகும். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வர்ஷா காலமானார். பாட்டியுடன் அதீத அன்புடனும் நெருக்கமாகவும் இருந்த வர்ஷாவின் பிரிவு ஜானகி அம்மாவை வெகுவாகப் பாதித்தது. இந்தத் துயரத்திலிருந்து அவர் மீள்வதற்குள்ளாகவே, கடந்த ஆண்டு அவருடைய ஒரே மகனான முரளி கிருஷ்ணாவும் உயிரிழந்தார். இந்த அடுத்தடுத்த மரணங்கள் அவரை முற்றிலுமாக உருக்குலைத்து, மைசூருக்கு இடம்பெயரக் காரணமாக அமைந்தன.

   

ஜானகி அம்மாவின் கடைசி நாட்களில் அவருடன் இருந்த இளைய பேத்தி அப்சரா, தனது பதிவில் பாட்டியும் சகோதரி வர்ஷாவும் குழந்தை குணம் கொண்டவர்கள் என்றும், எங்குச் சென்றாலும் அன்பைப் பரப்புபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். “வாழ்க்கை முடிந்தாலும் அன்பு முடிவதில்லை” என்று கூறியுள்ள அவர், இந்த உலகை விட்டுப் பிரிந்த தனது பாட்டியும் சகோதரியும் இப்போது மீண்டும் ஒன்றாக இணைந்திருப்பதே தமக்கு இருக்கும் ஒரே மன நிம்மதி எனத் தனது வேதனையையும் ஆறுதலையும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.