ஐயோ தாங்க முடியல! சுட்டெரிக்கும் வெயில்… வருண பகவானை குளிரவைக்க மாஸ் திருக்கல்யாணம்…மொய் எழுதி விருந்து சாப்பிட்ட ஊர்மக்கள்…!!

By Gayathri on ஆவணி 10, 2026

Spread the love

தமிழகத்தில் தற்போது சுட்டெரிக்கும் வெயில் மற்றும் போதிய மழையின்மை காரணமாகப் பல இடங்களில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதால், விவசாயப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடிய கோடை வறட்சியைப் போக்கி, வருண பகவானின் கருணையால் நல்ல மழை பெய்ய வேண்டி அப்பகுதி மக்கள் வினோதமான முறையில் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வை கோலாகலமாக நடத்தியுள்ளனர்.

முற்காலத்தில் மழையின்றி பஞ்சம் ஏற்படும் காலங்களில், ஆண் மற்றும் பெண் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் கட்டாயம் மழை வரும் என்ற ஆழமான நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது. காலங்கள் பல மாறினாலும், முன்னோர்கள் கடைப்பிடித்த இந்தச் சம்பிரதாயத்தை வேலூர், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் போன்ற பகுதிகளில் இன்றும் மக்கள் கைவிடாமல் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இயற்கையை வேண்டிச் செய்யப்படும் இத்தகைய சிறப்பு வழிபாடுகள் கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன.

   

இந்தக் கழுதை திருக்கல்யாணத்திற்காகப் பிரத்யேகமாக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அக்கம்பக்கத்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்டன. முகூர்த்த நாளாகக் குறிக்கப்பட்ட நன்னாளில், இரு கழுதைகளுக்கும் பட்டு உடுத்தி, மணமக்கள் போல அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். மனிதர்களுக்கு நடக்கும் திருமணங்களைப் போலவே பந்தகால் நடப்பட்டு, யாகங்கள் வளர்த்து, சிறப்பு பூஜைகளுடன் இந்தத் திருமணம் நடைபெற்றது. விழாவில் திரளாகப் பங்கேற்ற ஊர் பொதுமக்கள் மொய் எழுதி, வழிபாட்டில் கலந்துகொண்டு சென்றனர்.