பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் மற்றும் மாணவி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த ரவுடிகள் கும்பல் ஒன்று, கொடூரமான முறையில் தகராறில் ஈடுபட்டு அத்துமீறியுள்ளது.
மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டு, தப்பியோட முயன்ற சிறுமியை முகமூடி அணிந்த நபர் பின்னாலிருந்து பிடித்து இழுத்து ஆபாசமாகத் தொட்டுத் துன்புறுத்தியுள்ளார். தன்னை விட்டுவிடுமாறு அச்சிறுமி அலறித் துடித்து, கைகூப்பிக் கெஞ்சிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து போலிஸார் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட 3 காவாலிகளை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் கடுமையாகக் கண்டித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கைகூப்பிக் கெஞ்சிய சிறுமியிடம் குண்டர்கள் அத்துமீறியுள்ளனர். இது கலாச்சாரம் அல்ல, கேவலமான ஆணாதிக்கம். இரவு 7 மணிக்கு ஒரு சிறுமி பொதுச் சாலையில் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழலுக்கு பீகார் அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
