திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்… பேரதிர்ச்சியில் இபிஎஸ்…. பிப்ரவரி 14-ல் அரங்கேறப்போகும் அந்தப் பெரிய சம்பவம்….!

By Nanthini on மாசி 9, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும், வாணியம்பாடி தொகுதி முக்கிய பிரமுகருமான நீலோபர் கபில், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின்னர் சில காலம் அரசியலில் ஒதுங்கியிருந்த அவர், மீண்டும் அதிமுக நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கினார். இருப்பினும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதால், நீலோபர் கபில் ஓரம் கட்டப்படுவதாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

தன்னை மீண்டும் கட்சியில் வலுவான இடத்தில் அமர்த்த அதிமுக தலைமை தயக்கம் காட்டி வரும் நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்கு வங்கி பலமாக உள்ள வாணியம்பாடி பகுதியில் நீலோபர் கபிலுக்கு உள்ள செல்வாக்கை திமுக பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அரசியலில் இந்த கட்சித் தாவல் அதிமுகவிற்குச் சிறு பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், பிப்ரவரி 14 அன்று அறிவாலயத்தில் அரங்கேறப்போகும் இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.