என்னது… வெறும் 1 கி.மீ. வேகத்துக்கு ரூ 2,000 அபராதமா?… அதுவும் நடுக்கடல்லயா?… போலீஸிடம் கேள்வி எழுப்பிய ஓட்டுநர்… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

By Swetha on கார்த்திகை 13, 2026

Spread the love

யமுனா விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. வேகமாகச் சென்றதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வாகனத்தின் இருப்பிடத்தை நடுக்கடலில் காட்டிய சம்பவம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுஜீத் சிவம் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் இந்த விநோதமான போக்குவரத்து அபராதம் குறித்துப் பதிவிட்டுள்ளார். மணிக்கு 100 கி.மீ. வேக வரம்பு கொண்ட யமுனா விரைவுச் சாலையில், அவர் மணிக்கு 101 கி.மீ. வேகத்தில் சென்றதாகக் கூறி நொய்டா போக்குவரத்து காவல்துறையால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அபராத ரசீதில் வேகக் கண்காணிப்பு கேமரா அவரது இருப்பிடத்தை 0°N, 0°E எனப் பதிவு செய்துள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலின் நடுப்பகுதியைக் குறிக்கிறது.

   

இந்தப் பதிவைத் தொடர்ந்து நொய்டா போக்குவரத்து காவல்துறை, இது குறித்துத் தங்கள் இ-சலான் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பதிலளித்துள்ளது. அதே நேரத்தில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 5 சதவீத வேக வரம்பு சலுகை உள்ளதா என்பது குறித்தும், செயற்கை நுண்ணறிவு கேமராக்களின் துல்லியம் குறித்தும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.