தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு ‘பொது வேட்பாளரை’ களம் இறக்க திமுக ஆலோசித்து வருகிறது. அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் வென்று, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ள சூழலில், இந்த இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் தவெகவை எதிர்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த திமுக காய் நகர்த்தி வருகிறது. இத்தொகுதியில் கடந்த தேர்தலில் வென்ற அதிமுகவின் இசக்கி சுப்பையா, இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த தவெக வேட்பாளர் என மூவருமே தற்போது தவெக அணியில் உள்ளனர். இதனால், அங்கு கணிசமாக வாழும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த சீமானை நிறுத்தினால் தவெகவிற்கு கடும் சவாலாக இருக்கும் என திமுக கணக்கு போடுகிறது.
சீமானை சம்மதிக்க வைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடமும் திரைமறைவு பேச்சுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சீமானை சட்டமன்றத்திற்குள் அனுப்பினால் அது விஜய்க்கும் தவெகவிற்கும் கடுமையான அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என திமுக கருதுகிறது. இதனிடையே, இதுகுறித்து தங்களின் தரப்பில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும், அடுத்த சில நாட்களில் நடைபெறும் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படலாம் என்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
