உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் பகுதியைச் சேர்ந்த தீரேந்திர பரிஹார் என்ற வழக்கறிஞர், அக்டோபர் 17 அன்று கடைவீதிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் அக்டோபர் 31 அன்று காவல் நிலையத்தில் புகாரளித்தார். வழக்கறிஞரின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, அவர் நுமைஷ்கேத் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்ந்து பேசியது தெரிந்தது. விசாரணையில், சம்பவத்தன்று மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்த தீரேந்திரா முறைகேடாக நடக்க முயன்றதால், ஆத்திரத்தில் இரும்புத் கம்பியால் தலையில் அடித்துக் கொன்று சடலத்தைக் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்ததாக அப்பெண் ஒப்புக்கொண்டார்.
கொலையை மறைக்கத் திட்டமிட்ட அப்பெண், தனது சகோதரனின் உதவியுடன் காரில் சடலத்தைக் கொண்டு சென்று துனாய் பெண்ட் பகுதியில் வீசியுள்ளார். சிசிடிவி பதிவுகள் மற்றும் வாகனச் சோதனைகள் மூலம் துப்பு துலக்கிய காவல்துறையினர், நுமைஷ்கேத் பூங்கா அருகே வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தையும், பின்னர் கோமதி நதிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் அவரது உடலையும் மீட்டனர். குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய இரும்புத் தடி மற்றும் காரைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கொலை மற்றும் சாட்சியங்களை மறைத்த குற்றங்களுக்காக அந்தப் பெண்ணையும் அவரது சகோதரரையும் சிறையில் அடைத்தனர்.
