பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியில் உணவகம் நடத்தி வரும் அபிநந்தன் குமார் என்பவர் மீது, அவரது கடைக்குள்ளேயே புகுந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. தகராறில் ஈடுபட்ட அந்த நபர்கள், அவரைத் சரமாரியாகத் தாக்கியதோடு துப்பாக்கியாலும் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த அதிர்ச்சி சம்பவத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்; அங்கு அவரது நிலைமை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதமே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளையும் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
