தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்துள்ளனர்.
கடந்த தசரா பண்டிகையின் போது, அச்சிறுமியின் பெற்றோர் விவசாய வேலைக்காக வெளியே சென்றிருந்த சமயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. எதிரில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல், சிறுமியைத் தங்களது கிராமத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மறுநாள் காலையில் மீண்டும் ஊரில் கொண்டுவந்து விட்டுள்ளனர். இரவு முழுவதும் மகள் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் தேடியலைந்த நிலையில், சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியதை அடுத்துத் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் வெளியிடவில்லை. ஹுஸ்னாபாத் ஏசிபி மேற்பார்வையில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் உடனுக்குடன் போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்கள் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பது உறுதியானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
