ஆந்திராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஒன்றில், வாக்காளர்களைக் கவர ஒரு வேட்பாளர் குடும்பத்திற்கு தலா ஒரு கிலோ மட்டன், ஒரு கிலோ சிக்கன், 7 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 9,500 ரூபாய் பணம் என வாரி வழங்கியுள்ளார். இவ்வளவு தாராளமாகச் செலவழித்தும் அந்த வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தோல்விக்கான காரணத்தைத் தேடுவதை விட, வாக்களித்ததாகக் கூறப்பட்ட வாக்குறுதியை மீறியவர்களிடம் தனது பொருட்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கினார்.
இதற்காக சாமி படத்தை கையில் ஏந்தியபடி ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் சென்ற அந்த வேட்பாளர், “நீ எனக்குத்தான் ஓட்டுப் போட்டாய் என்று சாமி மீது சத்தியம் செய், இல்லையென்றால் நான் கொடுத்த பணம், மட்டன், சிக்கன் மற்றும் மதுபானங்களை உடனே திருப்பிக் கொடு” என்று தெலுங்கில் மிரட்டல் தொனியில் கேட்டுள்ளார். வாக்கு அளித்ததாக சத்தியம் செய்ய மறுத்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, தாங்கள் கொடுத்ததற்கு ஈடாக வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிச் செல்லும் இந்த விநோத மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
