சாலையில் ஒரு நொடி ஏற்படும் கவனச்சிதறல் வாழ்க்கையையே மாற்றிவிடும் என எச்சரித்து ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஹைதராபாத் டிராஃபிக் போலீஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு ஜோடி பைக்கில் சென்ற போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.
அதில், “ஒரு நொடி கவனச்சிதறல் எல்லாவற்றையும் மாற்றிவிடும். அதிவேகமும், அலட்சியமான மற்றும் கவனச்சிதறலுடன் கூடிய வாகன இயக்கமும் உங்கள் உயிரை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. சாலையில் செல்லும் போது கவனத்துடன் இருங்கள்; அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் முந்திச் செல்வதைத் தவிருங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்த வீடியோ ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் படமாக்கப்பட்டது என்றும், அப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் வீதி உள்கட்டமைப்பு குறித்தும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சாலைப் பராமரிப்பு தொடர்பாக ஜிஹெச்பிசி மற்றும் போக்குவரத்து காவல் துறை இடையே போதிய ஒருங்கிணைப்பு தேவை என்றும் இணையவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
