பார்த்தாலே பதறவைக்கும் காட்சிகள்.. தீப்பற்றி எரியும் வணிக வளாகம் .. பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் எரிந்து நாசம்..!!

By Soundarya on பங்குனி 18, 2026

Spread the love

சண்டிகரின் பரபரப்பான வணிகப் பகுதியான செக்டர் 22-ல் உள்ள கைபேசி சந்தையில், புதன்கிழமை மதியம் சுமார் 1:30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஒரு வணிக வளாகத்தில் தொடங்கிய தீ, அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் அடர்த்தியான கரும்புகை சூழ்ந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், செக்டர் 17 தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், பல மொபைல் கடைகள் மற்றும் ஒரு புகைப்பட ஆய்வகம் (Photo Lab) அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாவது தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக, கடைகளில் இருந்து புகை வெளியேறத் தொடங்கிய உடனே அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் துரிதமாக வெளியேற்றப்பட்டதால், உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இந்தத் தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.