தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி தமிழக எம்.பி.க்கள் கூட்டம், ஆளும் திமுகவிற்கு நேரடியாக அரசியல் செக் வைக்கும் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில், அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதி எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தினால் ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவில் திமுக இருப்பதாகத் தகவல்கள் கசியும் சூழலில், அத்தகைய ஆதரவை வழங்கக் கூடாது என வலியுறுத்துவதே விஜய்யின் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மாநில உரிமைகள் சார்ந்த விவகாரத்தில் திமுகவின் நெகிழ்வுப்போக்கை அம்பலப்படுத்தி, தமிழகத்தின் வலுவான எதிர்க்கரலாகத் தங்களை முன்னிறுத்த தவெக திட்டமிடுகிறது. அதேவேளையில், புதிய அரசியல் கட்சியின் இந்த அழைப்பை ஏற்று பங்கேற்பது தங்களின் அரசியல் நிலையை பலவீனப்படுத்தும் எனக் கருதி, இக்கூட்டத்தை முற்றிலும் புறக்கணிக்கவே திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் விவாதம் தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
