கர்நாடக மாநிலத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இளம் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடைத்தது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது முதலில் போலீசாருக்கு தெரியவில்லை. மேலும் அவரை யாரேனும் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என பல கோணங்களில் போலீசார் விசாரித்த நிலையில், இளம்பெண்ணை பற்றி அடையாளம் தெரியவந்தது.
இறந்த இளம்பெண், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த வர்ஷிதா (19). இவர் அப்பகுதியில் உள்ள, சமூக நலத்துறை விடுதியில் தங்கி, தனது கல்லூரியை படிப்பை மேற்கொண்டு வந்தார். கடந்த 14 ஆம் தேதி, ஊருக்கு செல்வதாக விடுதி வார்டனிடம் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு, தனது கல்லூரி சீருடையுடன், செல்போனில் பேசியபடி விடுதியிலிருந்து வெளியேற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்தது.
மேலும் விசாரித்த போலீசார், வர்ஷிதா – சேத்தன் என்பவரை காதலித்து வந்ததாக தெரியவந்தது.
சேத்தன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 3 ஆம் கட்டத்தில் உள்ள நிலையில், வர்ஷிதா வேறு ஒருவருடன் பழகிவந்தார். இதைப் பிடிக்காத சேத்தன், வர்ஷிதாவை கண்டித்துள்ளார். இதனை கேட்காத வர்ஷிதாவை, கோனூருக்கு செல்லலாம் என அழைத்துச்சென்று, சித்ரதுர்கா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த சேத்தன், வர்ஷிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மயங்கி விழுந்து உயிரிழந்த வர்ஷிதாவின் உடலில், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, தப்பி ஓடினார், சேத்தன். மேலும் சித்ரதுர்கா புறநகர் போலீசார், இது தொடர்பாக வழக்குபதிவு செய்து சேத்தனை கைது செய்தனர்.
