ராசிபுரம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையின் போது திடீரென மாயமான 12 வயது சிறுவன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தேவாலயத்தின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை பொட்டியுள்ள தீர்க்கதர்ஷன் தேவ சபா என்ற தேவாலயத்தில் மத போதகராக காபிரியல் ரமேஷ் இருந்து வந்துள்ளார். போலீசாக பணியாற்றி வந்த இவருடைய மனைவி ஷீலா கடந்த சில வருடங்களுக்கு விருப்ப ஓய்வு பெற்ற தேவாலயத்தை நிர்வகித்து வந்தார்.
இதனிடையே நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் அந்த தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ரமேஷின் மகன் எலெஜா பிளசன் திடீரென்று மாயமானதால் ரமேஷ் மற்றும் அங்கிருந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் தேவாலயத்தின் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு தீயணைப்புத் துறையினரை வரவழைத்து தேவாலயத்தின் அருகே உள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தானா என்று சோதனை செய்த நிலையில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 12 வயது சிறுவன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டான். இதனை தொடர்ந்து கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
