உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹாமரிஷி தேவராஹா பாபா மருத்துவ கல்லூரியில் 10 நாட்களுக்கும் மேலாக சடலம் கிடந்த தண்ணீர் தொட்டியில் இருந்து மாணவர்களுக்கும், வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் வார்டு கட்டிடங்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் தூய்மை பணியாளர்கள் ஐந்தாவது மாடியில் இருக்கும் தொட்டிக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சிதைந்த நிலையில் ஒரு சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ராஜேஷ் குமார் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டு புதிய முதல்வர் பொறுப்பேற்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
