புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே கணவர் கமலுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திருச்சி மணிகண்டம் காவல் எல்லைக்குட்பட்ட நாகமங்கலம் இந்திரா குடியிருப்பில் வசித்து வந்த ரேணுகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தூக்கில் தொங்கியுள்ளார்.
அந்த வீடியோவில், “நான் தூக்கு போட்டு சாகப்போறேன்… கமல் வந்ததும் பிள்ளையை ஒப்படைச்சிடு… நீயும் தப்பு பண்ண, நானும் தப்பு பண்ணேன்… உன் குழந்தையை பத்திரமா பாத்துக்கோ… என்னை இன்ஸ்டாவில் சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் தேங்ஸ், இதுதான் என் கடைசி வீடியோ, Byee!” என்று கண்ணீருடன் கதறிப் பேசியுள்ளார்.
முன்னதாகத் தனது சகோதரி ஸ்ரீதேவிக்கு “குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய நிலையில், உறவினர்கள் விரைந்து சென்று பார்த்தபோது ரேணுகா வீட்டில் சேலையால் தூக்கிட்டுச் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்துத் தந்தை அளித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கணவர் கமலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இன்ஸ்டாவில் கடைசி வீடியோ வெளியிட்டு இளம் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
