அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான கல்லூரி மாணவி டேல் ஆலிஸ் மார்ட்டின், பண்ணை வேலை ஒன்றின் போது காலில் ஏற்பட்ட கணுக்கால் முறிவுக்காக வாட்டர்பரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த அவருக்கு வலி நிவாரண மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெறும் 14 மணி நேரத்திற்குள் அவருக்கு மார்பின் மற்றும் ஆக்ஸிகோடோன் போன்ற அதீத சக்தி வாய்ந்த வலி நிவாரண மருந்துகள் அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டு, ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றதால் அவரால் உதவிக்குக்கூடக் குரல் கொடுக்க முடியவில்லை. மருத்துவ ஊழியர்களின் கண்காணிப்பு இல்லாத நிலையில், மறுநாள் காலை செவிலியர் சோதித்தபோது அவரது இதயம் செயலிழந்தது தெரியவந்தது. மருத்துவமனையின் அலட்சியமே மாணவியின் மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், தற்போது மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
