திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் லட்சுமணன் (15) என்ற சிறுவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இவரும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது உடைய சபரி ராஜன் என்பவரும் பழகிய நிலையில் அடிக்கடி சபரி ராஜன் லட்சுமணன் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். வணக்கம் போல நேற்று முன்தினம் மாலை மாணவர் லட்சுமணன் வீட்டுக்கு வந்த சபரி ராஜன் மாணவனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சபரி ராஜன் அறிவாளால் மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவனை சபரி ராஜன் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரி ராஜனை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 10 ஆம் வகுப்பு மாணவனை சபரி ராஜன் ஓரினசேர்க்கைக்கு அழைத்த நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கஞ்சா போதையில் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர்கள் மாணவனின் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்காத வரை மாணவனின் உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
