திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, தந்தை தும்மியபோது பைக் நிலைதடுமாறியதில் நேரிட்ட விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாரம்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர், தனது மனைவி, மகன் அஸ்வின் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிலம்பரசனுக்கு தும்மல் வந்ததால், பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அஸ்வின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். காயமடைந்த மற்ற மூவரும் தற்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
