தமிழ்நாடு அரசின் தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் கீழ், கறவை மாடு வங்கி கடன், அரசு மானியம் மற்றும் காப்பீடு போன்ற சலுகைகளைப் பெற கால்நடைகளுக்கு வழங்கப்படும் 12 இலக்க டிஜிட்டல் ஐடி எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் கிராமங்களுக்கே நேரடியாக வந்து மாடு மற்றும் எருமைகளின் காதுகளில் இந்த டிஜிட்டல் டேக்கை பொருத்திப் பதிவு செய்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் கால்நடையின் இனம், வயது, பாலினம், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ வரலாறு போன்ற அனைத்து விவரங்களும் டிஜிட்டல் டேட்டாபேஸில் ஏற்றப்படும்; மேலும், உரிமையாளரின் மொபைல் எண் மற்றும் அடையாள ஆவணங்கள் இதனுடன் இணைக்கப்பட்டு OTP மூலம் போலி பதிவுகள் இன்றி உறுதி செய்யப்படுகிறது.
கால்நடைகளை வாங்குபவர்கள் அல்லது விற்பவர்கள் இந்த 12 இலக்க எண்ணை ஸ்கேன் செய்வதன் மூலம் அதன் முழுமையான “பயோடேட்டாவை” எளிதாக அறிந்துகொள்ள முடியும். கால்நடைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவசர மருத்துவ உதவிக்காக 1962 என்ற இலவச நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார். கால்நடை வளர்ப்பவர்கள் இந்த டிஜிட்டல் டேக் பொருத்தும் பணிக்குத் தேவையான ஆவணங்களுடன் தயாராக இருந்து முழு ஒத்துழைப்பு நல்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோல், பருவமழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ளார். அதன்படி, கால்நடை கொட்டகைகளை பலத்த காற்று மற்றும் மழையைத் தாங்கும் வகையில் உறுதியாக அமைக்க வேண்டும்; மின்கசிவு மற்றும் மின்னல் பாதிப்புகளைத் தவிர்க்க மின்கம்பங்கள் அல்லது மரங்களின் அடியில் கால்நடைகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் கால்நடைகள் இறக்க நேரிட்டால், பேரிடர் நிவாரணம் அல்லது காப்பீட்டுத் தொகை பெற ஏதுவாக உடனே வருவாய்த்துறை மற்றும் கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவித்து பிணப்பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
